வினாஸ காலே விபரீத புத்தி !
ட்யூடின் சமீபத்திய இடுக்கையைப் படித்ததில் மனதோரம் ஒரு ஏக்கம். மேலும் ஏதோ தேம்ஸ் நதியோரமாக பிறந்து வளர்ந்ததைப்போல் மகளுடம் தினம் தினம் பீட்டர் விடுகையில் தாய் மொழி மறந்துவிடுமோ என்று உள்ளூர ஒரு உதறல். இதையெல்லாம் தாண்டி, தமிழில் மூளையைக் கசக்கி பிழிந்தாலாவது அது முழித்துக்கொண்டு, வேலை செய்யுமோ என்ற ஒரு நப்பாசை.
என்ன எழுத? அடுத்த வீட்டு பூனை பெண்பால் என்பது இன்றைக்கு தான் எனக்கு தெரியும் என்பதைப் பற்றியா? எங்கள் வீட்டில் நாஷ்னல் ஜியொக்ராபிக், பீபீசி, ஜேம்ஸ் பாண்ட், தசாவதாரம், ஹாரி பாட்டர், ஹிட்ச்காக், டிவிடிக்களைப் பார்க்க, ஒரு ப்ரும்..மா...ண்டமான மானிடர் + ஸ்பீக்கர் வாங்கியிருப்பதைப்பற்றியா? தகிக்கும் கத்திரி வெயிலைப்பற்றியா? சென்னையும் பெங்களூரும் மோதிக்கொண்டு இருக்கும் ஐபில்லைப்பற்றியா? அதை நேரில் பார்க்க சென்றிருக்கும் ட்யூடைப் பற்றியா?
சரி, படித்தைதை பேசுவோம். தமிழில் கடைசியாக நான் படித்த புத்தகம், பகவத் கீதை மொழிபெயர்பு. மொழி பெயர்த்தது யார் என்று கவனிக்கவில்லை. கீதையை எப்போது படித்தாலும் மனதில் ஏற்படும் சந்தேகங்கள், ஒரு விதமான பரிதவிப்பு தோன்றியதில், எப்பொதும் போல், பாதியில் மூடி விட்டேன். என்றாவது ஒரு நாள் கீதையை முழுவதும் படிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.
போன வாரம், மாமனார் வீட்டில் தமிழ் செய்தித்தாள், ஆனந்த விகடன், குமுதம் படித்தேன். ஒரு நண்பர் வீட்டில் நக்கீரன் படித்தேன். என்ன பயன் என்று தெரியவில்லை. கார்த்திக்கு திருமணமாம். எல்லா பத்திரிகைகளிலும் தடபுடல். யார் கார்த்தி? பெயரே கார்த்தியா, இல்லை கடைசியில் வரும் “க்”கன்னாவை ந்யூமராலஜி, பயாலஜி என்று எதாவது காரணத்திற்காக கழற்றி விட்டாரா?
பத்திரிகைகளில், எழுத்தை விட நடிக-நடிகைகளின் படங்கள் தான் நிறைய இருந்தன. இடுப்பையும் தொடையையும் காட்டியே தீருவேன் என்று எந்த கோவில் வேண்டுதல்?
தாத்தா போய் ஆத்தா வந்ததில் அதைப்ப்ற்றி வேறு ஏகப்பட்ட விமர்சனங்கள். எனக்கென்னவோ, ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் சாதா மனிதன் சோதா மனிதனாக தான் இருப்பான் என்று தோன்றுகிறது. ஆத்தா என்னைத் தப்பென்று நிரூபித்தால் மகிழ்வேன்.
ஆஹா. எனக்கு தமிழ் மறக்கவில்லை ! என்ன, ஐந்து நிமிடங்களில் எழுதியிருக்க வேண்டிய இடுக்கை அரை மணி நேரம் பிடித்தது. கீ போர்டில் தேடி தடவி தவறி தத்தி விக்கி எழுத இவ்வளவு தான் எனக்கு பொறுமை.
பிழைத்தது தமிழ். பிழைத்தனர் தமிழர்.
Recent Comments